திருத்தணியில் மீண்டும் ஒரு சம்பவம் ,வடமாநில இளைஞர் மீது தாக்குதல் -தலைமறைவாக இருந்தவர் கைது!
திருவள்ளூர், 07 ஜனவரி (ஹி.ச.) கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் பட்டுப்புடவை வியாபாரி ஜமால் என்பவர், ரயிலுக்காக திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருந்த போது இளைஞர் ஒருவர் அவரை திடீரென தாக்கினார். இதில் நிலைக்குலைந்த ஜமால், அப
Tiruttani Issue


திருவள்ளூர், 07 ஜனவரி (ஹி.ச.)

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் பட்டுப்புடவை வியாபாரி ஜமால் என்பவர், ரயிலுக்காக திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருந்த போது இளைஞர் ஒருவர் அவரை திடீரென தாக்கினார்.

இதில் நிலைக்குலைந்த ஜமால், அப்படியே ரயில் மேடையில் விழுந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி, சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அரக்கோணம் இருப்புப்பாதை போலீசார் குற்ற எண் 279/2025, 296(b), 118(i) மற்றும் 351(iii) BNS ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இருப்புப்பாதை காவல் நிலைய உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், அரக்கோணம் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதில், திருத்தணி செந்தமிழ் நகரை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பல இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ரத்தினகிரி முருகன் கோயில் அருகே தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

ஜமால் மது அருந்திக் கொண்டிருந்த போது அவரிடம் தான் மது தருமாறு கேட்டதாகவும், இதற்கு ஜமால் ஆபாசமாக திட்டியதால், ஆத்திரமடைந்து அவரை தாக்கியதாகவும் மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக திருத்தணி ரயில் நிலையத்தில் தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

Hindusthan Samachar / ANANDHAN