Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 07 ஜனவரி (ஹி.ச.)
தினமும் தோன்றி மறையும் சூரிய வழிபாடு இந்துக்களின் நம்பிக்கையில் ஒன்றாகும். சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் உத்தராயணம் மற்றும் புண்ணியகால உற்சவம் வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.
சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணியகாலம் (ஆடி முதல் மார்கழி மாதம் வரை) என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்தராயண புண்ணியகாலம் (தை முதல் ஆனி மாதம் வரை) என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் அண்ணாமலையார் உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றினர்.
இதைத்தொடர்ந்து 10 நாட்கள் தினமும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
விழாவின் நிறைவு நாளான வரும் 15ம்தேதி
(தை முதல் நாள்) தாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து 16ம்தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மிகவும் பிரசித்திபெற்ற திருவூடல் உற்சவமும், 17ம் தேதி மறுவூடல் உற்சவமும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b