Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 07 ஜனவரி (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பவுனம்மாள் (65). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது இரு பிள்ளைகளும், திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மூதாட்டி பவுனம்மாள், அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்தார்.
பவுனம்மாளுக்கு அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் மாட்டுக் கொட்டகை உள்ளது. இந்நிலையில், இன்று மாட்டுக் கொட்டகைக்கு வந்த பவுனம்மாளை மர்ம கும்பல் ஒன்று கை, கால்களை துணியால் கட்டி, கழுத்தை நெறித்தும், தலையில் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளது.
அதன் பிறகு பவுனம்மாள் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகளை அந்த கும்பல் பறித்துச் சென்றுள்ளது.
மாட்டுக் கொட்டைகையில் மூதாட்டிக் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதியினர் உடனடியாக அம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, கொலை நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.
அதை தொடர்ந்து மூதாட்டியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி பவுனம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன், மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக, அம்பலூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது தெரிந்தது.
இந்நிலையில், மூதாட்டியை மர்ம கும்பல் நகைக்காக அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Hindusthan Samachar / ANANDHAN