Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 07 ஜனவரி (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் கடையல் பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தோட்டாவரம் செங்குழிக்கரை பகுதியில் கோதையாற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு இருக்கிறது.
பேச்சிப்பாறை அணை பகுதியில் இருந்து தான் கோதையாற்றுக்கு தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து சுமார் 500 கன அடி வீதம் தினமும் திறந்து விடப்படுகிறது. இதனால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
கோதையாற்றில் உறைகிணறு பகுதியில் உள்ள ஆற்றில் பொதுமக்கள், வாலிபர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது உறைகிணறு மேல் ஏதோ ஒன்று கிடப்பதை சிலர் பார்த்தனர். சிறிது நேரத்துக்கு பின் அது முதலை என்பது தெரிந்தது.
சிறிது நேரம் அப்படியே கிடந்தது. இதை அந்த பகுதியில் நின்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்துக்கு பின் நகர்ந்து முதலை தண்ணீரில் விழுந்தது. இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உளளது.
இது குறித்து களியல் வனச்சரக ஊழியர்கள் கூறுகையில்,
கோதையாற்றில் நாங்கள் ஏற்கனவே ஆய்வு செய்து உள்ளோம். ஆனால் முதலைக்கான தடயங்கள் இல்லை. ஏற்கனவே 2, 3 வருடங்களுக்கு முன் முதலை பார்த்ததாகவும் சொல்கிறார்கள். அதன் பின்னர் எந்த தடயமும் இல்லை. கோதையாற்றுக்கு பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் வருகிறது.
பேச்சிப்பாறை அணையில் முதலை இருந்ததற்கான எந்த வித தடயமும் கிடைக்க வில்லை. மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். முதலை தண்ணீர், நிலத்தில் வாழும் தன்மை கொண்டது. நிலம் என்றால், நீர் பரப்பையொட்டி உள்ள நிலத்தில் முதலை நடமாட்டம் இருக்கும். கோதையாற்றில் நில பகுதியில் முதலை வந்ததற்கான தடயங்கள் இல்லை.
வனத்துறை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். தடயங்கள் எதுவும் இல்லாமல் வனத்துறை எதுவும் செய்ய முடியாது.
இதற்கு முன் கிடைத்த வீடியோவில் முதலை குட்டியாக இருந்தது. தற்போது உள்ள வீடியோவில் சற்று பெரிதாக தெரிகிறது. எனவே எதையும் ஆராயாமல் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b