மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி,தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.) வரலாறு காணாத அளவில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப
Anbumani


சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)

வரலாறு காணாத அளவில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, மரவள்ளி

கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்புக்கு மூலப் பொருளாக விளங்கும் மரவள்ளிக் கிழங்கின் விலை அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பையும், தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாதது தான் இதற்குக் காரணமாகும். கடமையைச் செய்யத் தவறியதன் மூலம் மரவள்ளி விவசாயிகளுக்கு திமுக அரசு பேரிழப்பை ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி பெரிய அளவில் செய்யப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலை மாறி, இப்போது டன் மரவள்ளிக் கிழங்கின் விலை ரூ.4700 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்த உழவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்புக்கு முழுக்க, முழுக்க திமுக அரசின் துரோகம் தான் காரணம்.

மரவள்ளிக் கிழங்குக்கான சந்தை விலையை தீர்மானிப்பவை ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் விலைகள் தான். வெளிச்சந்தையில் ஜவ்வரிசி விலையும், ஸ்டார்ச் விலையும் அதிகரித்தால் அவற்றின் மூலப் பொருளாக விளங்கும் மரவள்ளிக்கிழங்கின் கொள்முதல் விலை இயல்பாகவே அதிகரிக்கும். இதைக் கருத்தில் கொண்டு, உழவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், மரவள்ளிக் கிழங்குக்கு போதிய விலை கிடைக்கவும் போதுமான ஏற்பாடுகள் கடந்த காலங்களில் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய ஏற்பாடுகளில் ஒன்று தான் சாகோசர்வ் எனப்படும் சேலம் ஸ்டார்ச் மற்றும் சாகோ உற்பத்தியாளர்களின் சேவைக்கான தொழில் கூட்டுறவு சங்கம் ஆகும்.

1981&ஆம் ஆண்டில் சாகோசர்வ் தொடங்கப்பட்டதன் நோக்கமே மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் போன்றவை அதன் வாயிலாக மட்டுமே ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது தான். இதில் இரு நன்மைகள் உள்ளன. முதலாவதாக சாகோசர்வ் அமைப்பில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை தர ஆய்வுக்குப் பிறகே ஏலத்தில் விடப்படுவதால் அவை ஆரோக்கியமானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் இருக்கும். இரண்டாவதாக, ஏலம் மூலம் அவை விற்பனை செய்யப்படுவதால் அவற்றுக்கு நியாயமான விலை கிடைக்கும். ஆனால், சாகோசர்வ் செயல்பாடுகள் முடங்கி விட்டதால் வெறும் 20% ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை தான் அதன் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. மீதமுள்ள 80% ஜவ்வரிசி, ஸ்டார்ச் தரமற்ற நிலையில் குறைந்த விலைக்கு வெளிச்சந்தையிலும், வட மாநிலங்களிலும் விற்கப்படுகின்றன. அதனால் தான் மரவள்ளிக் கிழங்கு விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

குறைந்தபட்சம் மரவள்ளிக் கிழங்குக்கு கொள்முதல் விலையை அரசு நிர்ணயித்திருந்தால் கூட, அதற்கு நியாயமான விலை கிடைத்திருக்கும். 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,‘‘ உழவர்கள் உற்பத்தி செய்யும் வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள், மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய்வித்துக்கள், தோட்டக்கலைப் பொருட்கள் ஆகிய அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும். (வாக்குறுதி எண் & 35)’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரைக்கும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. உழவர்களின் துயரத்திற்கு இதுவே காரணம்.

உரவிலை உயர்வு, தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவிக்கும் மரவள்ளிக் கிழங்குக்கு டன்னுக்கு ரூ.4,700 மட்டும், அதாவது கிலோவுக்கு ரூ.5க்கும் குறைவாக வழங்குவது நியாயமல்ல. உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்க வேண்டும் அல்லது ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை முழுக்க முழுக்க சாகோசர்வ் அமைப்பின் மூலமாக விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யாதது தான் மரவள்ளிக்கிழங்கின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பதற்கு காரணம் ஆகும். இது உழவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.

உழவர்களுக்கு எதிரான துரோகத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். மரவள்ளி சாகுபடியில் உழவர்களுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய மரவள்ளிக் கிழங்குக்கு டன்னுக்கு ரூ.16,000 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஸ்டார்ச், ஜவ்வரிசி ஆகியவை சாகோசர்வ் வாயிலாக போட்டி ஏல முறையில் விற்பனை செய்யப்படுவதையும், அவற்றுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ