Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 08 ஜனவரி (ஹி.ச.)
கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 3-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு மகா தீபம் காட்சியளித்தது.
இதன் பின்னர் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை 2,668 அடி மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 3-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், திருமஞ்சன கோபுரம் அருகே தீப மை விற்பனை இன்று (ஜனவரி 08) தொடங்கியது.
ஒரு மை டப்பா ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு 20 டப்பாக்கள் வரை வழங்கப்படும்.
காலை 10 முதல் 1 மணி வரை, பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரை விற்பனை நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மஹா தீப மையை தினமும் நெற்றியில் இட்டால், பில்லி, சூனியம், ஏவல், போன்றவை தாக்காமல் இருப்பதோடு, எவ்வித அசம்பாவிதமும் நடக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும், அரசியல்வாதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தீப மை பிரசாதத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் இலவசமாக வழங்கப்பட்ட தீப மை பிரசாதம், தற்போது, 10 கிராம் எடையுள்ள குப்பியில் அடைக்கப்பட்டு, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனால், ஆண்டுக்கு, 5 முதல், 7 லட்சம் ரூபாய் வரை கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b