Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் தினசரி சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். விரைவான, பாதுகாப்பான, சொகுசான பயணம் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, காலை, மாலை வேளையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், பயணிகள் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் ஆலந்தூர் -வண்ணாரப்பேட்டை இடையே ‘பீக் அவர்ஸில்’ 3 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
காலை 8-11; மாலை 5-8 மணி: பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதாவது, விமானநிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் ஆலந்தூர் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை மாலை வேளைகளில் பீக் அவர்ஸில் 3 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
முன்பு, காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை 6 நிமிடம் மற்றும் 3 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது.
அதே நேரத்தில், விமானநிலையம் - ஆலந்தூர் இடையேயும், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் பணிமனை இடையேயும் தலா 6 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b