Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 08 ஜனவரி (ஹி.ச.)
கோவை சாய்பாபா காலனி பகுதியில் கார் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் விமல் ராஜ், ஆகாஷ் மற்றும் முரளி உள்ளிட்டோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் சார்பில் எட்டிமடை பகுதியில் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் முடிவடைந்து டெஸ்ட் டிரைவிற்கு வைக்கப்பட்ட காரை ஊழியர்கள் கோவைக்கு எடுத்துச் சென்றனர்.
காரை ஆகாஷ் ஓட்டிய நிலையில் முன் இருக்கையில் விமல்ராஜ் மற்றும் பின்புறம் முரளி அமர்ந்திருந்தனர். கார் எட்டிமடை சந்திப்பு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
ஆனாலும் வாகனத்தை நிறுத்தாத ஓட்டுநர், அருகில் இருந்த மற்றொரு பாதை வழியாக காரை இயக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், தரையில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு குழாய் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கார் உடனே தீப்பிடித்த நிலையில், காரை ஓட்டிய ஆகாஷ் மற்றும் பின்புறம் அமர்ந்திருந்த முரளி ஆகியோர் காரில் இருந்து இறங்கினர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த விமல்ராஜ் காருக்குள் சிக்கிக் கொண்டதால் தீயில் கருகி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்தே கவுண்டன் சாவடி மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்,
காரில் வந்து விபத்தை ஏற்படுத்திய ஊழியர்கள், பொதுமக்கள் தாக்கி விடுவார்கள் என்ற அச்சத்தில் காரை அதிவேகமாக ஓட்டியுள்ளனர்.
இதில், விபத்து ஏற்படுத்திய இடத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்ததால் ஊழியர்கள் அதனை கவனிக்காமல் விபத்து ஏற்பட்டதா?அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN