விநாயகர் சதுர்த்தி கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரை வெட்டிக்கொலை
கோவை, 08 ஜனவரி (ஹி.ச.) கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஜப்பான் என்று அழைக்கப்படும் பிரவீன் குமார் (வயது 24). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில காலமாக மைசூரில் உள்ள தென்னை நார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இரவு கோவை வந்து இருந்த பிரவீன
Covai Murder Case


கோவை, 08 ஜனவரி (ஹி.ச.)

கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஜப்பான் என்று அழைக்கப்படும் பிரவீன் குமார் (வயது 24). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில காலமாக மைசூரில் உள்ள தென்னை நார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இரவு கோவை வந்து இருந்த பிரவீன் குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து கெம்பட்டி காலனி, அசோக் அவென்யூ, பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் மறைவில் மது அருந்து கொண்டு இருந்தனர்.

மது அருந்து கொண்டு இருந்த போது திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிரவீன் குமாரிடம் தகராறில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பிரவீன் குமாரை கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் கை மற்றும் தலைப் பகுதிகளில் பலமாக தாக்கியது.

இதில் பலத்த காயம் அடைந்த பிரவீன் குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த 2024 ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏற்பட்ட மோதலில் கோகுல் கிருஷ்ணன் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிய வந்தவர்தான் இந்த பிரவீன் குமார். கோகுல் கிருஷ்ணன் கொலைக்கு காரணமாக பிரவீன் குமாரை பழிவாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து செல்வபுரம் காவல் துறையினர் பிரவீன் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN