Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 8 ஜனவரி (ஹி.ச.)
அரசு வேலைக்கான போலி பணி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக பணமோசடி விசாரணைக்காக ஆறு மாநிலங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமலாக்கத்துறையின் பாட்னா அலுவலகம் பிகார், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மோசடி ஆரம்பத்தில் ரயில்வே துறையின் பெயரில் கண்டறியப்பட்டது என்றும், ஆனால் விசாரணையில் இது வனத்துறை ஆர்ஆர்பி(ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம்), இந்திய அஞ்சல் துறை, வருமான வரித்துறை, சில நீதிமன்றங்கள், பொதுப் பணித்துறை, பிகார் அரசு, தில்லி மேம்பாட்டு ஆணையம், ராஜஸ்தான் செயலகம் உள்பட 40-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளை உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
அரசு வேலை வாங்கித்தருவதாக அந்தக் கும்பல், அரசு இணையதளங்களைப் போலியாகப் பயன்படுத்தி, போலி மின்னஞ்சல் மூலம் மோசடியான பணி நியமனக் கடிதங்களை அனுப்பியுள்ளதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
வேலை தேடுபவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அந்தக் கும்பல் ஆர்பிஎஃப், ரயில்வே டிடிஇ(பயணச்சீட்டு பரிசோதகர்) மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் போன்ற நிறுவனங்களில் மோசடியாகப் பணியமர்த்தப்பட்ட சில பாதிக்கப்பட்டவர்களுக்கு 2-3 மாதங்களுக்கு ஆரம்பச் சம்பளத்தையும் வழங்கியுள்ளது.
பிகாரில் உள்ள முசாபர்பூர் மற்றும் மோதிஹாரி, மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, கேரளாவில் எர்ணாகுளம், பந்தளம், அடூர் மற்றும் கோடூர், சென்னையில் (தமிழ்நாடு), ராஜ்கோட் (குஜராத்), உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், பிரயாக்ராஜ் மற்றும் லக்ளென ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM