Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 ஜனவரி (ஹி.ச.)
தங்கம் விலை எப்போது குறையும். இதுதான் இன்று ஒவ்வொரு சராசரி தமிழரின் வீட்டிலும் ஒலிக்கும் முக்கியக் கேள்வி.
2025-ஆம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாம் பார்த்த அதிரடி மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, இப்போது 2026-ஆம் ஆண்டிற்கான சந்தை நிலவரம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கம் மட்டுமல்ல, வெள்ளி மற்றும் தாமிரம் (Copper) ஆகிய உலோகங்களின் விலையும் இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சமீபத்திய சந்தை நிலவரங்களின்படி, 24 கேரட் தங்கம் ஒரு கிராம் சுமார் 13,800 ரூபாய்க்கும் மேலாக விற்பனையாகி வருகிறது. அதாவது 10 கிராம் தங்கம் 1.38 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வெறும் ஆரம்பம் தான் என்றும், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 கிராம் தங்கம் 1.50 லட்சம் முதல் 1.75 லட்சம் ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் அரசியல் மாற்றங்கள் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
தங்கம் விலை கணிப்பு
தங்கம் விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணி 'டி-டாலரைசேஷன்' என்று சொல்லப்படும் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறைவதுதான்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது கையிருப்பில் டாலருக்குப் பதிலாகத் தங்கத்தை அதிக அளவில் சேர்த்து வருகின்றன. இதனால் தங்கத்திற்கான தேவை உலக சந்தையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இது மட்டுமின்றி, அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு வலுவான அஸ்திவாரமாக அமைந்துள்ளது.
வெள்ளி விலை கணிப்பு
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இது தங்கத்தையே மிஞ்சும் அளவிற்கு லாபத்தைத் தரும் என்று எகனாமிக் டைம்ஸ் நிபுணர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ வெள்ளி 2.24 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், இது 2026-க்குள் 3.50 லட்சம் ரூபாயைத் தொடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம், வெறும் முதலீடு மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளதுதான்.
குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சூரிய சக்தி தகடுகள் தயாரிப்பில் வெள்ளி அத்தியாவசியமாக இருப்பதால், அதன் தட்டுப்பாடு விலையை ராக்கெட் வேகத்தில் ஏற்றி வருகிறது.
காப்பர் விலை கணிப்பு
மற்றொரு பக்கம், 'சிவப்புத் தங்கம்' என்று அழைக்கப்படும் தாமிரத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தாமிரம் 1,300 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான டேட்டா சென்டர்கள் மற்றும் பசுமை எரிசக்தித் திட்டங்களுக்குத் தாமிரம் அதிக அளவில் தேவைப்படுவதால், வரும் நாட்களில் இதன் விலை 1,500 ரூபாயைத் தாண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
கோடக் செக்யூரிட்டீஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் கருத்துப்படி, ஒரே அடியாகப் பணத்தைச் முதலீடு செய்யாமல், விலை குறையும் காலங்களில் சிறுகச் சிறுகச் சேமிப்பதே புத்திசாலித்தனம்.
தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தைத் தரும் என்றாலும், சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களைக் கவனித்துச் செயல்பட வேண்டியது அவசியம்.
Hindusthan Samachar / JANAKI RAM