Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 08 ஜனவரி (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்காற்றி வந்த ஆய்வாளர் மாதவ் காட்கில்(வயது 83) 1942ம் ஆண்டு மஹாராஷ்டிராவின் புனேவில் பிறந்தார்.
இவர், புனே பல்கலையில் உயிரியல் பட்டம் பெற்றார். அதேபோல, மும்பை பல்கலையில் கணிதத்தில் ஆய்வாளர் பட்டமும் பெற்றுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக பொறுப்பு வகித்த மாதவ் காட்கில், சிறப்புமிக்க அறிக்கையை உருவாக்கினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவப்படுத்தும் விதமாக, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற மத்திய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், கடந்த 2024ம் ஆண்டு சூழலியல் ஐநாவின் உலகின் மிக உயரிய விருதான 'சாம்பியன் ஆப் தி எர்த்' விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக மாதவ் காட்கில் நேற்று (ஜனவரி 07) இரவு புனேவில் காலமானார்.
அவரது மறைவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பிட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பிட்னாவிஸ் இன்று (ஜனவரி 08) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
மூத்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பத்மஸ்ரீ, பத்ம பூஷன் டாக்டர் மாதவராவ் காட்கில் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
இந்திய அறிவுசார் மரபில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் அதற்கான கொள்கைகளை உருவாக்குவதில் மாதவராவ் ஒரு முன்னோடித் தலைவராகத் திகழ்ந்தார். அவர் வெறும் எழுத்து மற்றும் அறிவூட்டுதலுடன் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்துவது குறித்த நடைமுறைப் பணிகளிலும் ஈடுபட்டார்.
இதில் உள்ளூர் சமூகங்களின் பங்கேற்பை அவர் வலியுறுத்தினார். மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாப்பதற்காக அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவின் பல்லுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் சிற்பியாக அவர் குறிப்பிடப்பட வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல விருதுகளால் அவர் கௌரவிக்கப்பட்டார்.
ஒரு ஒழுக்கமான மற்றும் இலட்சியவாத ஆளுமை நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது குடும்பத்தினரின் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b