Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 08 ஜனவரி (ஹி.ச)
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது;
மதுரை மாநகர் கூடல் நகர் மாநகராட்சி வார்டு 2 ல் மதுரை மேற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கூடுதல் பாலம் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
வார்டு 2 ன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15 லட்சம் செலவில் தொகுதி மேப்பாட்டு நிதியில் இருந்து கூடுதல் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது.
24 மணி நேரமும் தங்கு தடையின்றி குடி நீர் கிடைக்க, இந்த வார்டு 2 பகுதிக்கு, முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து இணைப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப் பணி நடைபெற்று திறந்து வைக்கப்பட்டதால், ஆங்காங்கே இணைப்புகள் சரியாக கொடுக்கப்பட வில்லை. ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறுகிறது.
மேலும், முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், பிஜேபி தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் என பிதற்றுகிறார்.
போதைக் கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. இப்படி அவர்கள் கூட்டணியில் உள்ள வைகோவே சொல்லி இருக்கிறார்.
அதிமுக கூட்டணிக்கு வரக் கூடிய கட்சிகள் குறித்து, பொதுச் செயலாளர் எடப்பாடி தான் முடிவு செய்கிறார். கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறோம். மக்கள் மனக் குமுறுலோடு இருக்கிறார்கள். இந்த ஆட்சியை அகற்ற மக்கள் ஆர்வமோடு இருக்கிறார்கள். 2026 அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற கட்சிப் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
நாங்கள் பாஜகவுக்கும் அமித்ஷாவுக்கும் அடிமை என நீங்கள் தான் ஏதேதோ சொல்கிறீர்கள்.
125 நாட்களாக வேலை உறுதி திட்டத்தை உயர்த்திக் கொடுத்த அமித்ஷாவிற்கு நன்றி சொல்லத்தான் பொதுச் செயலாளர் எடப்பாடி, அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார்.
விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் என்பது தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது.
கூட்டணிப் பலத்தில் தான் திமுக இருக்கிறது. எங்கள் அம்மா போன்று யாருடைய கூட்டணியையும் எதிர்பாராமல் திமுகவும் முதலமைச்சரும் இருக்க முடியுமா?
அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் தன்னைப் பற்றி தானாகவேப் பெருமை பேசுகிறார். மக்கள் இந்த ஆட்சியைப் பற்றி, பெருமையாகப் பேசுகிறார்களா? தைரியமாக இருந்தால், தேர்தலில் தனித்து திமுக நிற்க முடியுமா?
3000 கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் திமுக வெற்றிப் பெற முடியாது. அவர்கள் பெருமைப் பேச ஒன்றுமில்லை.
கூட்டணியைப் பற்றி, எங்கள் பொதுச் செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக பலமிழக்க வில்லை. திமுக தான் பலமிழந்து இருக்கிறது. பாமகவில் நடப்பது உட்கட்சிப் பிரச்சினை. தந்தை மகன் விவகாரம் அது.
முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங்
குன்றம் அருகே, முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்.
அமித்ஷா மாபெரும் தலைவர். அவரது இயக்கம் மாபெரும் இயக்கம். விஜய் கட்சி
மற்றும் அவரது படத்திற்கு நெருக்கடி கொடுப்பது போன்ற வேலை எல்லாம் அவர் செய்ய
மாட்டார். எமனையேப் பார்த்தவர்கள் நாங்கள். நாங்கள் யாருக்கும் எப்போதும் அடிபணிந்து போக
மாட்டோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி அளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam