Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 08 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவின் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி, எழுத்தாளர் மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றவருமான மாதவ் காட்கில், புனேவில் உள்ள அவரது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பாதுகாப்பதற்கான இவரது குரல், இந்திய சூழலியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
1942-ல் புனேவில் பிறந்த காட்கில், மும்பை பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் படிப்பை முடித்தார்.
பின்னர், உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1973-ல் இந்தியா திரும்பிய அவர், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) இணைந்தார்.
1986-ம் ஆண்டு இந்தியாவின் முதலாவது பயோஷ்பியர் ரிசர்வ் ஆன நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.
வனப்பகுதிகளைப் பாதுகாப்பதில் அங்கு வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இவரது தீவிர ஆராய்ச்சியின் விளைவாகவே 1986-ல் நீலகிரி காடுகள் இந்தியாவின் முதல் 'உயிர்க்கோளக் காப்பகமாக' அறிவிக்கப்பட்டது.
2010-ம் ஆண்டு, மத்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் தலைவராக காட்கில் நியமிக்கப்பட்டார்.
இவர் தாக்கல் செய்த 'காட்கில் அறிக்கை' மேற்குத் தொடர்ச்சி மலையின் 75% பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியது. அங்குச் சுரங்கப் பணிகள் மற்றும் பெரிய கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கக் கோரியது.
காட்கில் அறிக்கை,
இன்றுவரை சூழலியல் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
சுமார் 215 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 6 முக்கியப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
அவரது மறைவு இந்திய இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பெரும் குரலை அமைதிப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam