Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 08 ஜனவரி (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் கடந்த ஆண்டு ஜூலை 27ம்தேதி ஏரல் ஆறுமுகமங்களத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் செல்வ கணேஷ் சாதிய வன்கொடுமை மற்றும் ஆணவக் கொலை நோக்கில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள தூத்துக்குடி கல்குவாரி உரிமையாளர் ஜெயபால், நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கவின் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை முன்னாள் எஸ்.ஐ. சரவணன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயபால் என்பவர் கொலைக்கான தடயங்களை மறைக்க உதவியது மற்றும் கவினை மிரட்டியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயாரும், பெண் எஸ்.ஐ-யுமான கிருஷ்ணகுமாரி இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் .
இவ்வழக்கில் ஜெயபால் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாகத் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.
இ-நீதிமன்ற தரவுகளின்படி, கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை மனு மீதான விசாரணை மட்டுமே சுமார் 13 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN