Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 08 ஜனவரி (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன்.
இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது எதிர்வீட்டைச் சேர்ந்தவர் சபரிராஜன் (23). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆம் தேதி டிவி பார்க்க பக்கத்துக்கு வீட்டிற்கு ஒன்றாக சென்றுள்ளனர்.
அப்போது அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் சபரிராஜன் சிறுவனை அரிவாளால் வெட்டி உள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பணகுடி போலீசார் சபரிராஜன் மீது கொலை முயற்சி (307) வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சபரிராஜன் மதுபோதையில் சிறுவனின் தலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமாரிடம் ஈடிவி பாரத் சார்பில் கேட்டபோது,சபரிராஜன் மதுபோதையில் இருந்துள்ளார். வேறு எந்த போதை வஸ்துக்களும் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் ஓரினச்சேர்க்கைக்கு சிறுவனை கட்டாயப்படுத்தியதற்கான எந்த விதமான ஆதாரமும் தற்போது வரை கிடைக்கவில்லை.
தொடர்ந்து சபரிராஜனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN