அன்புமணி பாமகவில் இல்லை, அவர் உரிமை கோர முடியாது - ராமதாஸ்
விழுப்புரம், 08 ஜனவரி (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக பேசினார். தற்போது தமிழக அரசியல் சூழல் மிகுந்த பரபரப்பில் உள்ள நிலையில், அதற்கிடையே நடந்த சில சம்
Ramadoss vs Anbumani


விழுப்புரம், 08 ஜனவரி (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக பேசினார்.

தற்போது தமிழக அரசியல் சூழல் மிகுந்த பரபரப்பில் உள்ள நிலையில், அதற்கிடையே நடந்த சில சம்பவங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு தனிநபர் அல்லது சிலர், கட்சியின் ஒப்புதலோ, அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையோ இல்லாமல் ஒப்பந்தம் செய்ததாகவும், கையெழுத்து போட்டதாகவும் பேசப்படுவது உண்மையா என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.

பாமகவைப் பொருத்தவரை, அது தன்னால் தொடங்கப்பட்ட கட்சி என்றும், அதில் உரிமை கொண்டாட வேறு யாருக்கும் தகுதி இல்லை என்றும், யாராலும் உரிமை கோர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த கட்சியை ஆரம்பித்து, வியர்வையும் ரத்தமும் சிந்தி, இரவு பகல் பாராமல் உழைத்து, தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்த்தெடுத்ததாக ராமதாஸ் நினைவுகூர்ந்தார்.

அந்த உழைப்பின் பலனாகவே பாமக இன்று ஒரு அரசியல் சக்தியாக இருக்கிறது என்றும், அந்த அடிப்படை உண்மையை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இத்தகைய சூழலில், ஒருவரை தனது சத்தியத்தை மீறி கட்சியில் சேர்த்து, மத்திய அமைச்சராக உயர்த்தியதாகவும், ஆனால் அந்த நபர் தன்னையே துரோகம் செய்வார் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றும் ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.

அந்த நபரின் செயல்பாடுகள், சூழ்ச்சிகள் மற்றும் கட்சிக்குள் மேற்கொண்ட நடவடிக்கைகளை கணித்த பிறகே, மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தே நீக்க முடிவு செய்ததாகவும் கூறினார்.

தன்னைப் பற்றியும், தன்னுடன் நீண்ட காலமாக இருந்து உழைத்தவர்களை மனம் நோகும் வகையில் பேசுவது, ஒரு கோஷ்டியை உருவாக்கி கட்சியை கைப்பற்ற முயல்வது போன்ற செயல்கள் தமிழ்நாடு அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கட்சி தலைமை பொறுப்பை வழங்கியபோதும், அந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்சியையே தன்னிடமிருந்து பறிக்க முயன்றதை மக்கள் அனைவரும் அறிவார்கள் என்றும் அவர் கூறினார்.

நீதிமன்ற தீர்ப்பின்படி, அன்புமணி தற்போது பாமகவில் இல்லை என்றும், அவர் அடிப்படை உறுப்பினரிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் தெளிவுபடுத்தினார். பாமக என்பது தனிநபரால் தொடங்கப்பட்ட கட்சி என்பதாலும், நிறுவனர் என்ற முறையில் கட்சியின் தலைமை பொறுப்பை தானே மீண்டும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

கட்சி தலைமைக்கு உரிய மரியாதை, ஒழுக்கம், பண்பு எதுவும் இல்லாததால் இந்த முடிவை எடுக்க வேண்டியதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

பாமக கட்சி முழுவதும் தன்னிடமே இருப்பதாகவும், தொண்டர்கள் முழுமையாக தன்னை ஆதரிப்பதாகவும், மற்றவர்களிடம் பணத்திற்காக சில நபர்கள் மட்டுமே உள்ளதாகவும் அவர் கூறினார்.

அன்புமணியின் துரோகத்தை கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் நன்கு புரிந்துகொண்டதாகவும், இனி அவர் யாரை எங்கு நிறுத்தினாலும், பாமக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி நீதிமன்றம் செல்லலாம் என்றும், ஆனால் பாமக சார்பில் கூட்டணி குறித்து பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் கூறினார்.

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் தன்னிடமே உள்ளதாகவும், தனது தலைமையில் அமைக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு நாடகமே என்றும், அந்த நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் கவனித்து, ஏன் ஒரு மகன் தந்தைக்கு இப்படிச் செய்கிறார் என கேள்வி எழுப்புவார்கள் என்றும் ராமதாஸ் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

Hindusthan Samachar / ANANDHAN