Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 08 ஜனவரி (ஹி.ச.)
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் அரசு கொறடாவுமான அனந்த ராமன் ஏற்பாட்டில் பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று (ஜனவரி 08) நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் வைத்தியநாதன் எம்எல்ஏ, மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போலி மருந்துகள் தயாரித்து விற்றதில் இமாலய ஊழல் நடந்துள்ளது. மக்களுடைய உயிரோடு விளையாடும் போலி மருந்துகளை தயாரித்து இந்தியா முழுவதும் விநியோகித்துள்ளனர்.
ராஜா, அவரது கூட்டாளிகள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். போலி மருந்து தயாரித்து விற்று மக்கள் உயிரோடு விளையாடியது கொலை குற்றத்துக்கு சமம்.
இந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு நீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை. அவர்களை விடுவிக்கக் கூடாது என்று அழுத்தம் தரவில்லை. முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், உள்துறை அமைச்சர் மற்றும் என்.ஆர்.காங்.- பாஜக அரசு ஊழல் குற்றவாளிகள், போலி மருந்து தயாரித்தவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த வழக்கை மூடி மறைக்க பார்க்கிறார்கள்.
சிபிஐ கூட முறையாக விசாரிப்பார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவத் துறை முதல்வரின் துறை. இதில் ஊழல் நடந்திருக்கிறது. இவ்வாறு இருந்தும் ஜாமீனில் வெளியே வருகிறார்கள் என்றால் அரசின் ஒத்துழைப்பு இல்லாமலும், ஆதரவு இல்லாமலும் வெளியே வர முடியாது.
புதுவையில் உள்ள மருந்து கடைகளில் எத்தனை மருந்து கடைகளில் போலி மருந்து உலாவுகிறது என்று தெரியவில்லை. இதனை யாரும் கண்டுபிடிக்கவில்லை. துணை நிலை ஆளுநரை சந்தித்து மருந்து கடைகளில் உலாவி வரும் போலி மருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறினோம். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், ஜிஎஸ்டி அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அரசே இந்த வழக்கை மூடி மறைக்க பார்க்கிறது. இதில் குற்றவாளிகளும், ஆட்சியாளர்களும் கூட்டு சதி செய்கின்றனர். இதனை விடமாட்டோம். இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்து நியாயத்தை கேட்போம்.
என்று நாராயணசாமி கூறினார்.
மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
போலி மருந்து வழக்கில் சிபிஐ வருவதற்கு முன்பே ஜாமீனை கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று இந்த அரசு முயற்சி செய்து வெற்றி அடைந்துள்ளனர். இந்த அரசு அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று மறுக்கக்கூட இல்லை.
மாறாக அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு உண்டான வழிகளையெல்லாம் செய்து ஜாமீன் வழக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து போலி மருந்து விவகாரத்தில் அரசு அவர்களுக்கு முழுமையாக துணையோடு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இதனை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறோம், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பண இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வர் பண இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்கின்றார்.
எதற்கெடுத்தாலும் பணம் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் ரூ.5 ஆயிரம் கோடி கொள்ளையடித்த போலி மருந்து நிறுவனத்தினரை விட்டுவிட்டு பணம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய மோசடி. இதுபோன்ற மோசடியை புதுச்சேரியில் இதுவரை பார்த்ததே இல்லை.
இந்த ஊழலை பார்க்கும்போது ரெஸ்டோ பார் மோசடிகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. வெள்ளை அறிக்கை எப்போது கொடுக்கிறாரோ கொடுக்கட்டும். அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். உண்மையில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இதில் யாருக்கும் சந்தேகமே இல்லை, தெளிவாக இருக்கிறது. ஆனால் இவர்கள் மூடி மறைக்கின்றனர்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்பி தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b