Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 08 ஜனவரி (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இமெயிலில், ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டல் தகவல் கிடைத்த உடனேயே நீதிமன்ற நிர்வாகம் அதனை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உடனடியாக புகார் அளித்தது.
புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றிய நீதிபதிகள், ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பொதுமக்கள் மற்றும் வழக்கு தொடர்பாக வந்திருந்தவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாமல், வெளியே பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு விரைந்து வந்தனர்.
மோப்ப நாய் தேவசேனாவை கொண்டு, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட நவீன கருவிகளின் உதவியுடன், நீதிமன்ற வளாகம் முழுவதும் துருவி துருவி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொரு நீதிமன்ற அறை, அலுவலக அறைகள், வழக்கறிஞர்கள் அமரும் பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மிகக் கவனமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வெடிகுண்டு பொருத்தப்பட்டிருக்கக் கூடிய சந்தேகமான இடங்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய, வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகளை பயன்படுத்தி விரிவான சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் உண்மையா அல்லது வதந்தியா என்பது குறித்து முழுமையான சோதனை முடிந்த பின்னரே உறுதி செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மிரட்டல் இமெயில் எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டது, அதற்கு பின்னால் யார் உள்ளனர் என்பதை கண்டறிய சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற மிரட்டல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அனுப்பப்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதையும் காவல்துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
சோதனை பணிகள் முழுமையாக முடியும் வரை நீதிமன்ற செயல்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று முழுவதும் பரபரப்பும், பதற்றமான சூழலும் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN