Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)
தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியற்றுடன் ரூ.3,000 ரொக்கத்துடன் சேர்த்து வழங்கும் பணியை சென்னை ஆலந்தூரில் இன்று
(ஜனவரி 08) காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மற்ற மாவட்டங்களில் ரொக்கப் பணம் ரூ.3,000, பொங்கல் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர்கள் வழங்கி பணியை தொடங்கி வைப்பார்கள்.
பொங்கல் தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலைகளும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் சீராக நடைபெறுவதற்காக கூட்டுறவு துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கடந்த பல நாட்களாக தீவிரமாக முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி மற்றும் சர்க்கரை 100 சதவீதமாக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட வேட்டி மற்றும் சேலைகள் பெரும்பாலும் மக்களிடம் சென்றுவிட்டதாகவும், சில இடங்களில் மீதம் இருந்த பொருட்கள் குடோன்களில் இருப்பதாகவும், அவற்றை இந்த ஆண்டும் தேவைக்கேற்ப வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிகாலையிலேயே வேலைக்கு செல்லும் நிலையில், அவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று (ஜனவரி 08) முடிவடைந்துள்ள நிலையில், டோக்கன் பெறாதவர்கள் தங்களது ரேஷன் கடை ஊழியரைத் தொடர்பு கொண்டு, அவர்கள் குறிப்பிடும் தேதியில் பொருட்களையும் ரொக்கத்தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b