இன்று தொடங்குகிறது அதிமுகவின் வேட்பாளர் நேர்காணல்
சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.) 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறுகிறது. அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாம
Admk


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறுகிறது.

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் நேர்காணல் நடத்துகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் எடப்பாடி பழனிசாமி தங்களின் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 2,187 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

போட்டியிட விரும்பி விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் தொகுதி வாரியாக இன்று முதல் எடப்பாடி பழனிசாமி நேர்காணலை நடத்த உள்ளார்.

முதல்நாளான இன்று காலை சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் நடைபெறுகிறது.

பிற்பகலில் நாமக்கல், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு, நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.

ஒவ்வொரு தொகுதிக்கும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிக்கு விருப்பமனு தாக்கல் செய்திருக்கும் அனைவரையும் ஒன்றாக சந்தித்து எடப்பாடி பழனிசாமி நேர்காணல் செய்கிறார்.

கட்சி வளர்ச்சிப் பணி, நடத்திய போராட்டங்கள், சிறை சென்ற விவரங்கள், தொகுதி மக்களிடையே இருக்கும் செல்வாக்கு, வெற்றிக்கான வாய்ப்பு ஆகியவை குறித்து நேர்காணலில் விவாதிக்கப்படுகிறது.

கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்த உள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ