ரூ.3.51 கோடி மோசடி புகாரில் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன். இவர் கடந்த மே மாதம் பனையூரைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரும், முன்னள் அதிமுக நிர்வாகியும், நடிகருமான அஜய் ரோகன் என்கிற அஜய் வாண்டையார் மீது த
Ajay Vandaiyar


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன். இவர் கடந்த மே மாதம் பனையூரைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரும், முன்னள் அதிமுக நிர்வாகியும், நடிகருமான அஜய் ரோகன் என்கிற அஜய் வாண்டையார் மீது தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், ‘நடிகர் அஜய் வாண்டையார் சென்னை தேனாம்பேட்டையில் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இவர் அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், தனது நிறுவனத்தில் தொழில் கூட்டாளியாக இணைந்தால் அதிகப்படியான லாபம் ஈட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி நான் சுமார் 3.51 கோடி பணத்தை அவரிடம் கொடுத்தேன்.

ஆனால், நான் கொடுத்த பணத்திற்கு அரசு ஒப்பந்தங்கள் மற்றும் அரசு வேலையை அவர் வாங்கி தரவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது திருப்பி தராமல் என்னை ஏமாற்றி வந்தார். இதனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தரவேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் மாநகர காவல் மத்திய குற்றப்பிரிவு பிரிவு போலீசார் 406, 409, 420 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டர். இதில், அவர் தலைமறைவானது தெரியவந்தது.

இதனையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் அஜய் வாண்டியார் மலேசியாவிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பித்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அனுப்பினர்.

இந்நிலையில், கடந்த 7 மாதங்கள் கழித்து அஜய் வாண்டையார் மலேசியாவில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அங்கு குடியுரிமை அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை பரிசோதித்தபோது அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனால், அவரை தனி அறையில் அடைத்து வைத்து, இதுகுறித்து விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூர் விமான நிலையம் சென்று, அஜய் வாண்டியாரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும், மோசடி செய்த தொகையில் இணையதள வர்த்தகம் மூலமாக பிட்காயினில் (bitcoin) முதலீடு செய்துள்ளதும், மலேசியா, இலங்கை, அரபு நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்றதும், சினிமாவில் நடிப்பதற்காக முதலீடு செய்தததையும் ஒப்புக்கொண்டார்.

மேலும், விசாரணையில் இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவிலும், நுங்கம்பாக்கம், பட்டினம்பாக்கம் காவல் நிலையங்களிலும், மோசடி மற்றும் கட்டப் பஞ்சாயத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலில் சிறைக்கு சென்று வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அஜய் வாண்டையாரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN