Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 09 ஜனவரி (ஹி.ச.)
மத்தியில் ஆளும் பாஜகவின் தேசிய தலைவராக அண்மையில் நிதின் நபின் பொறுப்பேற்றார்.
புதுச்சேரி செல்லும் வழியில் கடந்த மாதம் தமிழகம் வந்த நிதின் நபின், இரண்டாவது முறையாக நாளை (ஜனவரி 10) தமிழகம் வருகிறார்.
நேரடியாக கோவை வருகை தரும் அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். நாளை மாலை கோவை வந்தடையும் அவர், அங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஜனவரி 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் பாஜக-வின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், பாஜக-வின் கிளை அளவிலான வளர்ச்சிப் பணிகள், சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட விவாதங்களில் அவர் ஈடுபடுகிறார்.
தொடர்ந்து, அதிமுக - பாஜக - பாமக கூட்டணி பலம் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கிறார். இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
தொடந்து தேசியத் தலைவர்களின் வருகையால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், நிதின் நபினின் இந்த இரண்டு நாள் பயணமும் பாஜக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b