Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளுர், 09 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும்,
அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தினை திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
(ஜனவரி 09) தொடங்கி வைத்தார்.
உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.
தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர்.
அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.
தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர்.
இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b