சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6,500-க்கு விற்பனை
ஈரோடு, 09 ஜனவரி (ஹி.ச.) தமிழகத்தில் மிகப்பெரிய பூ மார்க்கெட்டுகளில் ஒன்றான சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ நேற்று முன்தினம் கிலோ ரூ. 2700க்கு விற்பனையானது. அதுவே, ஒரே நாளில் இரண்டு மடங்காக உயர்ந்து நேற்று கிலோ ரூ.4,300-க்கு விற்பனை செய
Jasmine


ஈரோடு, 09 ஜனவரி (ஹி.ச.)

தமிழகத்தில் மிகப்பெரிய பூ மார்க்கெட்டுகளில் ஒன்றான சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ நேற்று முன்தினம் கிலோ ரூ. 2700க்கு விற்பனையானது. அதுவே, ஒரே நாளில் இரண்டு மடங்காக உயர்ந்து நேற்று கிலோ ரூ.4,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மல்லிப்பூ விலை மேலும் ரூ.2,100 உயர்ந்து, அதிகபட்சமாக கிலோ ரூ.6,400-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை வரலாறு காணாத விலை உயர்வு ஆகும்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மல்லிகை செடிகளை பொறுத்தவரை கோடை காலத்தில் அதிக விளைச்சல் கொடுப்பது வழக்கம்.

குளிர்காலங்களில் பனிப்பொழிவு காரணமாக செடிகளில் உள்ள அரும்புகள் சிறுத்து பூக்கள் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் விளைச்சல் குறைந்து விடுகிறது. கோடை காலங்களில் ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வரை விளைச்சல் தரும் மல்லி, குளிர்காலத்தில் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை மட்டுமே விளைச்சல் கிடைக்கிறது.

இந்நிலையில், தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதன் காரணமாக விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளது. இதுவே இந்த வரலாறு காணாத விலையேற்றத்துக்கு காரணம் ஆகும்.

இப்போதே மல்லி விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்றால், பொங்கல் பண்டிகையின் போது மல்லிப்பூ விலை மேலும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் கடும் விலையேற்றத்தை சந்திக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, வரத்து குறைவு காரணமாக மதுரையிலும் மல்லி பூ விலை எகிறியுள்ளது. அங்கு ஒரு கிலோ மல்லி ரூ.6,000-க்கு விற்பனை ஆகிறது. மதுரை மலர் சந்தையில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் பின்வருமாறு: மதுரை மல்லி கிலோ ரூ.6000, பிச்சி ரூ.1200, முல்லை ரூ.1300, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.50, கனகாம்பரம் ரூ.1500 , ரோஸ் ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.300, மரிக்கொழுந்து ரூ.150, தாமரை (ஒன்றுக்கு) ரூ.20 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN