Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் நாளை (ஜன.10) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ’பராசக்தி’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியானால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி, பராசக்தி படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான பராசக்தி இந்தி எதிர்ப்பு தொடர்பான கதை என கூறப்படுகிறது. அந்த வகையில் படத்தின் டிரெய்லரில் ‘டெல்லி மட்டும் தான் இந்தியாவா’ என்பன உள்ளிட்ட பல கவனிக்கத்தக்க வசனங்கள் இடம்பெற்றுள்ளன. பராசக்தி படத்தை பார்த்த சென்சார் குழு படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவினரிடம் தெரிவித்தது.
இதனால் 'பராசக்தி' திரைப்படம் நாளை வெளியாவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், இன்று சென்சார் குழு UA சான்றிதழ் வழங்கியுள்ளது. இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் பிரச்சனையால் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், 'பராசக்தி' திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN