Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 9 ஜனவரி (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஓரிரு மாதங்களில் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸின் ஒரு தரப்பினர் திமுகவுடனும், மற்றொரு தரப்பினர் தவெகவுடனும் கூட்டணி வைக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசை விமர்சித்தும், தவெகவுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பதிவிட்டு வருவதால் தமிழக அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் தரப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் வருகின்ற ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாள்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாருடன் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM