Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 09 ஜனவரி (ஹி.ச.)
காரைக்குடி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் கட்டிப்போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காதி நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை மரிய கலைச்செல்வி என்பவரின் வீட்டிற்குள், இரவு நேரத்தில் முகமூடி (மங்கிக்குள்ளா) அணிந்து வந்த இருவர் நுழைந்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த அவரை அவர்கள் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், அவரை கட்டிப்போட்டு அச்சுறுத்திய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த சோமநாதபுரம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மரிய கலைச்செல்வியிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற போலீசார், கொள்ளையர்கள் வந்த வழி, பயன்படுத்திய வாகனம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சோமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கவலை அதிகரித்துள்ள நிலையில், போலீசார் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN