ஆண்டுதோறும் 3 நாட்கள் வள்ளலார் பிறந்த விழா நடத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15) வள்ளலார் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சென்னை மேய
ஆண்டுதோறும் 3 நாட்கள் வள்ளலார் பிறந்த விழா நடத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மைதானத்தில் இன்று

(பிப்ரவரி 15) வள்ளலார் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அனைத்துலக வள்ளலார் மாநாட்டு வளாகத்தில் கொடி ஏற்றினார். இதனையடுத்து சேத்துப்பட்டு - நேரு பூங்கா அருகில் சமரச சுத்த சன்மார்க்க பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

வள்ளலார் காட்டிய அறநெறிகளை பின்பற்றுபவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைத்துலக வள்ளலார் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

அறநிலையத் துறையில் திராவிட மாடல் அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. 4,192 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

12,937 திருக்கோவில்களில் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் 29,479 திருப்பணி நடைபெற்று வருகிறது.

ரூ.8,423 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 8,106 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது.

திருக்கோவில்கள் சார்பில் 2800 திருமணங்கள் செய்து வைத்துள்ளோம். 19 திருக்கோவில்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வள்ளலாரை போற்ற வேண்டியது தமிழகத்தின் கடமை. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொல்லி உலகிற்கே 'தனிப்பெரும் கருணை என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில்தான் திராவிட மாடல் அரசும் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுகிறது.

ஏழை மக்களின் பசியை 'பிணி' என்று சொன்னார் வள்ளலார். அந்த பிணியை நீக்கும் மருந்துதான் திராவிட மாடல். அதற்கு காலை உணவுத் திட்டம், தாயுமானவர் திட்டம் உள்ளிட்டவை தான் சான்று.

வள்ளலார் நகர் பஸ் நிலையத்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைத்துள்ளோம்.

வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லத்தை புனரமைத்தோம்.

வள்ளலாரை போற்றுவதுடன் நமது பணி நின்றுவிடக்கூடாது. அவருடைய வழிமுறைகளை பின்பற்ற இந்த மாநாடு வழி வகுக்க வேண்டும்.

நமது பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கிறார்கள். வள்ளலார் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்க கூடாது. பிரிவினை சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல், அன்பும், பண்பும், அறனும், கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டி, அதற்கான பெயர் பலகையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

வள்ளலார் மாநாடு நடந்ததை குறிக்கும் வகையில் இப்பள்ளி வளாகத்தில் நினைவுத்தூண் அமைக்கப்படும்.

வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி அமைக்கப்படும். அந்த பள்ளியில் இசை பயிற்சியும் அளிக்கப்படும்.

வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும்.

வள்ளலார் புத்தகம் அறநிலையத்துறை பதிப்பகம் மூலம் வெளியிடப்படும்.

வள்ளலார் பிறந்தநாளை யொட்டி, ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும்.

மேட்டுகுப்பம், மருதூர் உள்ளிட்ட இடங்களில் வள்ளலார் அன்னதானக் கூடங்கள் அமைக்கப்படும்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்து வரும் பூங்காவுக்கு வள்ளலார் பூங்கா என பெயர் சூட்டப்படும்.என்றார்.

Hindusthan Samachar / vidya.b