நயினார் நாகேந்திரன், அமைச்சர் நாசர் விமர்சனத்துக்கு என்ன பதில்? - தவெக அருண்ராஜ் கேள்வி
நாமக்கல், 15 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகம், பள்ளிபாளையம் ராஜா ஆர்த்தோ சென்டர் மற்றும் திருச்செங்கோடு கவிதா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய விலையில்லா மருத்துவ முகாம், திருச்செங்கோடு பெரிய பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று நடைப
அருண்ராஜ்


நாமக்கல், 15 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகம், பள்ளிபாளையம் ராஜா ஆர்த்தோ சென்டர் மற்றும் திருச்செங்கோடு கவிதா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய விலையில்லா மருத்துவ முகாம், திருச்செங்கோடு பெரிய பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

முகாமில் எலும்பு, மூட்டு, இதயம், மகப்பேறு, அறுவை சிகிச்சை, குழந்தைகள் பிரிவு, தோல் மருத்துவம் ஆகிய பிரிவுகளின் கீழ் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த முகாமில் ரூ.2500 மதிப்புள்ள எலும்பு வலிமை ஸ்கேன், ரூ.1200 மதிப்புள்ள இசிஜி எக்கோ, ரூ.1,000 மதிப்புள்ள யு.சி.ஜி அப்டமன், பிஎம்ஐ மெஷின், சர்க்கரை, யூரிக் ஆசிட், பிளட் பிரஷர் பரிசோதனை ஆகியவை விலையில்லாமல் மேற்கொள்ளப்பட்டது.

முகாமை தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் டாக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்ததோடு, அவரும் மக்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ்,

தவெக சார்பில் நடக்கும் மருத்துவ முகாமுக்கு என்னுடன் மருத்துவம் படித்தவர்கள், என் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து மக்கள் பணி செய்வதே தவெகவின் நோக்கம். இப்போது அல்ல, கட்சி ஆரம்பிக்கும் முன்பிருந்தே, 25 ஆண்டுகளாகவே மக்கள் பணிகளை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நிர்வாகிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து செய்வோம் என்றார்.

பின்னர், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அருண்ராஜ் பதிலளித்தார்.

நயினார் நாகேந்திரன் விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?என்ற கேள்விக்கு,

முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரியாக அறிவித்த கட்சியின் மாநிலத் தலைவர் கீழ்த்தரமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.

மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், இதைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை.

அவருடைய தரத்தை அவரே குறைத்துக் கொண்டிருக்கிறார். நயினார் நாகேந்திரனுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை மக்களே ஒதுக்கி விட்டார்கள் என பதில் அளித்துள்ளார்.

சேலம் சம்பவம் வரை விஜய் அரை சதம் அடித்துள்ளார், விரைவில் அவர் கூட்டங்களில் நடக்கும் சம்பவங்கள் மூலம் செஞ்சுரி அடிப்பார்,என்றார்.

அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளாரே? என்ற கேள்விக்கு,

நடந்தது ஒரு விபத்து, இதைவைத்து மோசமான அரசியல் செய்வதை நாங்கள் விரும்பவில்லை.

அமைச்சர் அப்படிப் பேசியதை நாங்கள் கண்டிக்கிறோம். திமுக எந்தளவுக்கு மோசமான ஆட்சி செய்துகொண்டிருக்கிறது, வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஊழல் கரை புரண்டு ஓடுகிறது, ஜனநாயகத்துக்கு எதிரான குடும்ப ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள், இதையெல்லாம் பார்த்துத் தான் கட்சி ஆரம்பித்திருக்கிறோம்.

தீய சக்தி திமுக வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள். அதற்காகவே கட்சி ஆரம்பித்திருக்கிறோம்.

என பதில் அளித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam