Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச)
முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்து உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தி தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கோவளம், பசுவந்தரை, தன்பாடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் (Shipyard) அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முல்லைக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், அப்பகுதி மக்களின் முக்கியமான மற்றும் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அங்குள்ள உப்பளங்கள் அழிக்கப்படும் அபாயம் உருவாகி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதும், தொழிலாளர்களின் உரிமைகளை காப்பதும் அரசின் அடிப்படை கடமையாகும்.
எனவே, முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம். மேலும், அப்பகுதி மக்கள், சிறு உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆகியோருடன் அரசு கலந்தாலோசனை நடத்தி, மக்களின் கருத்தை மதிக்கும் ஜனநாயக அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து உப்பு விலை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் இந்த நாட்களில், உப்பு உற்பத்தியாளர்களை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
எனவே, இதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக தேமுதிக சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ