மகா சிவராத்திரி திருநாளில், தேசம் முழுவதும் ஹர் ஹர் கங்கே மற்றும் ஓம் நம சிவாய மந்திரங்கள் எதிரொலி
புதுடெல்லி, 15 பிப்ரவரி (ஹி.ச.) சிவபெருமானுக்குரிய மகா சிவராத்திரி விழாவானது, நாடு முழுவதிலும் அதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, சிவன் கோவில்களிலும், கங்கை, யமுனை போன்ற புனித நதிக்கரைகள் மற்றும் ஏரிக்கரைகளிலும், அதிகாலை பிரம்ம முகூர்த்த
மகா சிவராத்திரி திருநாளில், தேசம் முழுவதும் ஹர் ஹர் கங்கே மற்றும் ஓம் நம சிவாய மந்திரங்கள் எதிரொலி


புதுடெல்லி, 15 பிப்ரவரி (ஹி.ச.)

சிவபெருமானுக்குரிய மகா சிவராத்திரி விழாவானது, நாடு முழுவதிலும் அதி விமரிசையாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக, சிவன் கோவில்களிலும், கங்கை, யமுனை போன்ற புனித நதிக்கரைகள் மற்றும் ஏரிக்கரைகளிலும், அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் இருந்தே ஹர் ஹர் கங்கே, ஓம் நம சிவாய போன்ற தெய்வீக மந்திரங்கள் எதிரொலிக்கத் தொடங்கின.

வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் அயோத்தி போன்ற நகரங்கள் சிவமயமான சூழலில் மூழ்கின.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரிலுள்ள மஹாகாலேஸ்வரர் ஆலயம், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், ஜார்கண்டின் தியோகர் நகரிலுள்ள பாபா வைத்தியநாத் ஜோதிர்லிங்க ஆலயம் போன்ற புகழ்பெற்ற தலங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை வழிபட்டனர்.

பக்தர்கள் புனித நீர் ஊற்றி ஓம் நம சிவாய என்று கோஷமிட்டனர்.

தேசிய தலைநகரான டெல்லியில், சாந்தினி சௌக்கில் அமைந்துள்ள கௌரி சங்கர் ஆலயம் மற்றும் சத்தர்பூரில் உள்ள ஸ்ரீ ஆத்ய காத்யாயினி சக்தி பீடம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில் உள்ள பாபுல்நாத் கோவிலிலும் இதே போன்ற பக்திமயமான காட்சி நிலவியது.

ஒடிசாவில், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 17,000 ருத்ராட்ச மணிகளைக் கொண்டு சிவலிங்கத்தை உருவாக்கி மகா சிவராத்திரிக்கு மெருகூட்டினார்.

அயோத்தியில் ராம் கி பைடியில் உள்ள பழமையான நாகேஷ்வர் நாத் கோவிலில் இருந்து பிரமாண்டமான சிவன் ஊர்வலம் புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இசைக்குழுக்கள், அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் மற்றும் தெய்வங்களின் உருவங்கள் ஊர்வலத்திற்கு மேலும் சிறப்பை சேர்த்தன.

க்ஷீரேஷ்வர்நாத் கோவிலில் ஊர்வலம் வரவேற்பு பெற்றது. இரவு நேரத்தில் சிவபெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

சனிக்கிழமையன்று, பாரம்பரிய சடங்குகளுடன் போலே பாபாவுக்கு மஞ்சள் பூசப்பட்டது. வேத மந்திரங்கள், மேள தாளங்கள் மற்றும் ஹர் ஹர் மகாதேவ் கோஷங்களுக்கு மத்தியில் திருமணச் சடங்குகள் இனிதே நடந்தேறின.

சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Hindusthan Samachar / JANAKI RAM