2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு - மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (15.02.2026) நடைபெற்றது. இதில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரி
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு  மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (15.02.2026) நடைபெற்றது.

இதில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழ்நாட்டு நலன்களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரிமைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத ஃபாசிஸ்டுகளின் கொடும்பிடியிலிருந்து தமிழ்நாட்டை காத்து நின்று, சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி, சமய நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளின் வழியே தமிழ்நாட்டின் ஆட்சியை நடத்தி, கல்வியிலும் தொழில்துறையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்கி, ஒன்றிய பாஜக அரசின் ஓயாத இடையூறுகளைக் கடந்து, ஓங்கி நிற்கும் திமுக அரசையும் அதை கலைஞரின் முத்திரையோடு இயக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இப்பொதுக்குழு மனமார பாராட்டுகிறது.

இந்த ஆட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு மென்மேலும் வளர்ந்திட, சமூக நல்லிணக்கம் மலர்ந்திட, சமூகநீதி கோட்பாடுகள் ஓங்கி ஒளிர்ந்திட, சிறுபான்மையினர் முன்னேற்றம் சிறந்திட திமுக கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து, 2026ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெறுவதற்கு முதன்மை காரணமாக நமது களப்பணிகள் அமைந்திட வேண்டும் என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்ப்ட்டது.

அதோடு சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b