மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தஞ்சாவூர், 15 பிப்ரவரி (ஹி.ச.) சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இரவு. பொதுவாக, இந்த விரத வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கொண்
மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்


தஞ்சாவூர், 15 பிப்ரவரி (ஹி.ச.)

சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

இது சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இரவு. பொதுவாக, இந்த விரத வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையிலான திருமணத்தின் கொண்டாட்டம் என்றும், சிவபெருமான் லிங்கமாக தோன்றிய இரவாகவும் சிவராத்திரி வழிபாட்டிற்கு காரணமாக புராணங்கள் கூறுகின்றன. இந்த இரவில் சிவனை வழிபடுவதன் மூலம், பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கி, முக்தி அடையலாம் என்பது ஐதீகம்.

அந்த வகையில் . உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் வார விடுமுறை மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பெருவுடையாருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் சிவராத்திரியை முன்னிட்டு இரவு 10 மணி, நள்ளிரவு 12 மணி, 2 மணி, அதிகாலை 4 மணி என நான்கு கால பூஜைகள் நடை பெறவுள்ளது.

பக்தர்கள் அதிகளவில் திரண்டு உள்ளதால், கோயிலில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைவரும் முழு சோதனைக்குப் பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு கோவிலுக்குள் ஒரு வழிப் பாதையாக மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / vidya.b