Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 15 பிப்ரவரி (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடா வருடம்
பாரம்பரிய நிகழ்வான சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓடியே சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டு
வருகின்றனர். இந்த வருட மகா சிவராத்திரி நிகழ்வு இன்றிரவு நடைபெறவுள்ள நிலையில் சிவலய ஓட்டம் நேற்றே தொடங்கியது.
முதல் சிவாலயமான முஞ்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து சிவாலய ஓட்டத்தை
தொடங்கும் பக்தர்கள் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு
சென்று அங்கிருந்து அடுத்தடுத்த சிவாலயங்களுக்கு கையில் விசிறி ஏந்தி காவி உடை தரித்து ஓட்டமும் நடையுமாக சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் இன்று சிவாலய ஓட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் அதிகாலை முதலே முதல் சிவாலயமான முஞ்சிறை மகாதேவர் கோவிலில் குடும்பத்தினருடன் குவிந்த
பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு கோவிந்தா கோபாலா முழக்கத்துடன் சிவாலய ஓட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நடந்தும் கார் பைக்குகளில் சிவாலய ஓட்டத்தை
மேற்கொள்ளும் பக்தர்கள் நள்ளிரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு 12 ஆவது சிவாலயமான திரு நட்டாலம் மகாதேவர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை முடித்து சுவாமி
தரிசனம் மேற்கொள்கின்றனர்.
சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் சாலை வழியாக சிவாலய ஓட்டம் மேற்கொள்ளும் பக்தர்கள் செல்வதால் பக்தர்கள் நலன் கருதி மாவட்டத்திற்குள் கனரக வாகனங்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam