Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 16 பிப்ரவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, சக்கையநாயக்கனூரைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டி (70) இவரது மனைவி மீனாட்சி (65) இவர்களது மகன் சுருளி (45) என்பவர், விவசாய நிலம் மற்றும் சொத்து கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், மது போதையில் சொத்து கேட்டு சுருளி என்பவர் பெற்றோர் பாண்டி, மீனாட்சி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அரிவாளால் தனது தந்தை பாண்டி, தாயார் மீனாட்சி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாண்டி மற்றும் மீனாட்சி ஆகிய இருவரையும் இன்று 108 ஆம்புலன்ஸ்சில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவத்தில் தற்போது சிகிச்சை பலனின்றி தந்தை பாண்டி உயிரிழந்தார். பெற்றோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சுருளி என்பவரை மடக்கிப் பிடித்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர், சொத்து பிரச்சினைக்காக பெற்றோரை அரிவாளால் வெட்டினாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வெட்டினாரா? என, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மகன் வெட்டியதில் உயிரிழந்த பாண்டி என்பவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சொத்து பிரச்சனையில் தந்தையே மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN