Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 பிப்ரவரி (ஹி.ச.)
மும்பையில் நாளை நடைபெறும்
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு இந்திய-பிரான்ஸ் உறவில் ஒரு புதிய மைல்கல்லாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் சந்திப்பாகவும் அமைய உள்ளது.
இந்திய அரசின் அழைப்பை ஏற்று, 3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாளை இந்தியா வருகிறார்.
டெல்லி AI மாநாட்டிற்குப் பின்னர், நாளை பிற்பகல் 3:15 மணியளவில் மும்பை லோக் பவனில் பிரதமர் மோடியை அவர் சந்திக்கிறார்.
இது பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் 4-வது இந்தியப் பயணம் மற்றும் முதல் மும்பை பயணமும் ஆகும்.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா - பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு, விண்வெளி மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்தும், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் அவர்கள் விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.
மாலை 5:15 மணியளவில், இரு தலைவர்களும் இணைந்து 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026' (India-France Year of Innovation 2026) நிகழ்வைத் தொடங்கி வைக்கின்றனர்.
இதில் இரு நாடுகளையும் சேர்ந்த தொழில் அதிபர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அவர்கள் உரையாற்ற உள்ளனர்.
ஐரோப்பாவில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரான்ஸ் விளங்கும் நிலையில், மும்பையில் நடைபெறும் இந்தச் சந்திப்பு இரு நாடுகளின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இந்திய வருகையின்போது புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Hindusthan Samachar / GOKILA arumugam