Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேரவையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். உரையை ஆளுநர் வாசித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 22-ம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விகள் எழுந்த நிலையில் கடந்த 8-ம் தேதி சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறும்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது.
அன்று 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன.
சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பேரவை நிகழ்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உலகெங்கிலும் இருந்து யார் வேண்டுமானாலும் இணையதளம் மூலம் பார்க்க முடியும்.
அமைச்சரின் பதில் உரைகள், மானியக் கோரிக்கைகள், சிறப்பு தீர்மானங்கள் போன்றவை நேரலை செய்யப்படுகின்றன. விவாதங்களை முழுமையாக நேரலை செய்வது குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
அதன்படி 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (பிப்ரவரி 17) செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுகிறது.
20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண் டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன. நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் 20-ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று மாநிலத்தின் 2வது பொருளாதார அறிக்கை வெளியாக உள்ளது.
2025-ல் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.2% வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், பொருளாதார வளர்ச்சி, விவசாயம், தொழில் துறை, வேலைவாய்ப்பில் கடந்தாண்டு தமிழ்நாட்டின் வலுவான சாதனைகளை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b