ஒடிசாவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து தேனியில் விற்பனை செய்து வந்த 3 பேர் கைது
தேனி, 16 பிப்ரவரி (ஹி.ச.) தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள குமுளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக குமுளி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் சூரிய திலகரணி தலைமையில் லோயர
Kumuli Police Station


தேனி, 16 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள குமுளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக குமுளி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் சூரிய திலகரணி தலைமையில் லோயர் கேம்ப் சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சொகுசு கார் ஒன்று சந்தேகப்படும் படியாக வருவதை பார்த்த போலீசார், வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்தில் 35 கிலோ கஞ்சாவை பெண் உள்பட 3 பேர் சாக்கு மூட்டையில் எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து மூன்று பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த முனியசாமி, பாலசுப்பிரமணியன் மற்றும் செல்வி ஆகிய மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து ஒடிசாவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து தமிழ்நாடு பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களிடம் இருந்து 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்து அவர்கள் வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம், அவர்களது செல்போன், மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும் கஞ்சா விற்பனையில் இவர்களுடன் வேறு எவருக்காவது தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில் அடிக்கடி கஞ்சா வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் கஞ்சா வளர்த்து சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்த நபர் பிடிபட்டார்.

வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம், கல்லுருண்டான் சுனை சாலையில் வசித்து வரும் தமிழன் (56) என்பவர், தனது வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து, அதனை காயவைத்து உதிரியாக விற்பனை செய்து வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN