Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 16 பிப்ரவரி (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் உதகை மண்டலத்தில் 337 வழித்தட பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இன்று புதிதாக 16 புகையில்லா பேருந்துகளின் சேவையை உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் தலைமை கொறடாவும், குன்னூர் எம்எல்ஏவுமான கா.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த 16 பேருந்துகள் ஒவ்வொன்றும் ரூபாய் 40.61 லட்சம் செலவில் வாங்கப்பட்டதாக கூறினார்.
குறிப்பாக உதகை-திருச்சி வழித்தடம், உதகை-கள்ளிக்கோட்டை, உதகை-மைசூர், உதகை-சேலம், குன்னூர்-சேலம், குன்னூர்-பழனி, கோத்தகிரி-திருச்சி உள்ளிட்ட 16 வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது.மேலும் 22 பேருந்துகள் உதகை மண்டலத்தில் விரைவில் இயக்கப்பட உள்ளது.
இனிவரும் காலங்களில் BS6 பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளதால், உதகையில் புகையில்லா சூழ்நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது இயக்கப்பட உள்ள புதிய பேருந்துகளில் பேருந்து இருக்கும் இடத்தை கண்டறியும் வகையில் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு, பேருந்துகளில் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் பேருந்தில் உள்ள PANIC BUTTON அழுத்தினால் அருகிலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மலை மாவட்டத்திலிருந்து சமவெளிப் பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுவதால், குறித்த நேரத்திற்கு ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனிடையே, நகரப் பகுதிக்கு புதிய பேருந்துகள் இயக்குவதைப் போன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கும் புதிதாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பயனடைவார்கள் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை கொறடாவும் குன்னூர் எம்எல்ஏவுமான கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, உதகை நகர மன்ற தலைவர் வாணிஸ்ரீ, துணைத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN