தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.) தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் பதவி ஏற்பு நிகழ்ச்சி சென்னை வடபழனியில் அமைந்துள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படங்களில் இருக்
Ye


சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் பதவி ஏற்பு நிகழ்ச்சி சென்னை வடபழனியில் அமைந்துள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படங்களில் இருக்கக்கூடிய அனைத்து சங்கங்களிலிருந்தும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக,தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், தானு, நடிகர் நாசர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பி.வாசு, விக்ரமன் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார்,பேரரசு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில்,நடிகர் இளவரசு பேசியபோது,

ஆர்கே செல்வமணி பற்றி புகழ்ந்து பேசும் அளவிற்கு அவர் எங்க எல்லாரையும் கொண்டு வந்து விட்டார். கஷ்ட பட்டு இயக்குநராக வந்தார். இயக்குநராக இருந்து நாயகியை காதலித்து கரம் பிடித்தார் என்று நகைச்சுவையாக பேசினார்.

மற்ற சங்கங்களை போல் இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கான உதவி ஏதும் கிடைப்பதில்லை. பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்திருக்கும் இயக்குநர்கள் சங்கத்திற்கு உதவிசெய்ய வேண்டும். இன்று வெற்றி பெற்றிருக்கும் பல இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினராக கூட ஆகவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.

அனைத்து சங்கத்திலும் தொழிலாளர்கள் இறந்தாலோ, ஓய்வு பெற்றாலோ கொடுக்க கூடிய உதவித்தொகை இயக்குநர்கள் சங்கத்தில் இல்லை. அதை கொடுத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.என்றார்.

பெஃப்சி பொதுசெயலாளர் சுவாமிநாதன் பேசியபோது,

தயவுசெய்து இயக்குநர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும், படப்பிடிப்பில் வேலை பார்க்க கூடிய நேரம் மாலை 6 மணி வரை தான். அதுதான் வேலை நேரம். 6.30 நேரம் என்பது நீங்களாக உருவாக்கிய நேரம்.

அதிலிருந்து நேரம் அதிகரிக்கிறது என்பது தேவையில்லாத பல சிக்கல்களை உருவாக்குகிறது. தொழிலாளர்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.என்றார்.

இயக்குனர் விக்ரமன் பேசியபோது,

பிரம்மாண்ட விழா ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்த நிகழ்வில் நிதி திரட்டி நமது நிர்வாகிகளுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும்.எனக்கு உடல்நிலை சரியில்லை இருப்பினும் அனைத்து விஷயங்களிலும் உடன்‌ நிற்பேன். இந்த சங்கம் மென்மேலும் வளர வேண்டும்.என்றார்.

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசிய போது,

நூறு நாட்களுக்குள் இயக்குனர்களை தவிர்த்து அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்க வழி சம்பளத்தை அமல்படுத்துவோம்.படத்தை பதிவு செய்து தான் வேலை செய்ய வேண்டும்.

உதவி இயக்குனர்களுக்கு அடிப்படை 2000‌ரூபாய் வழங்க பொதுக்குழு தீர்மானம் கொண்டுவரப்படும்.2027-2028 ஆண்டு கூட்டத்தில் 75 ஆயிரம் அந்த அதற்கு மேல் ஏத்தலாமா என்பது குறித்து பொதுக்குழு தீர்மானத்தை முடிவெடுக்கப்படும்.

சிறிய படங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. 50% சதவீதத்திற்கும் மேலான உறுப்பினர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். அப்டேட் செய்யாமல் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் தயாரிப்பாளர் நேரடியாக சந்தித்து கதை சொன்னார். தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் இப்பொழுதெல்லாம் முகம் தெரியாதவர்களுக்கு கதை சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது.அதற்கு ஏற்றவாறு நம் அனைவரையும் தயார் படுத்த வேண்டும்.

இயக்குனர் சங்கம் கல்வி நிலையமாக ஒழுக்கமாக இருக்க வேண்டும்.ஒடிடி நிறுவனங்களை தொடர்பு கொண்டு நம் படங்களை கொண்டு செல்ல வேண்டும். மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எடுக்க நினைப்பதை விட டூரிஸ்ட் பேமிலி, ரப்பர் பந்து போன்ற திரைப்படங்களை எடுத்த நினைத்தால் 200 திரைப்படங்கள் உடனடியாக எடுக்கலாம்.

இயக்குனர் என்ற பெயரை, சுய மரியாதையை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது.கதை சொல்வது மட்டுமே இயக்குனரின் அடிப்படை என்று தீர்மானிக்க கூடாது என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ