Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
கோவை மாநகரின் சிங்காநல்லூர் பகுதியில் வசந்தாமில் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார், திருச்சி சாலையில் சிங்காநல்லூர் பகுதியில் “மகாதேவ்” என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடை, பொதுமக்கள் தங்க மற்றும் வெள்ளி நகைகளை அடகு வைத்து கடன் பெறும் இடமாக அறியப்படுகிறது.
இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று கடைக்கு விடுமுறை அறிவித்திருந்தார். வழக்கமாக இரவு நேரம் வரை இயங்கும் கடை, பண்டிகை காரணமாக முழுவதும் மூடப்பட்டிருந்தது. கடையை பூட்டி விட்டு, ரமேஷ்குமார் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறம் வந்துள்ளனர். கடையின் பின்புற ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள், கடையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகளை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்ப கட்ட தகவலின்படி, சுமார் 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் மிகுந்த திட்டமிட்டு செயல்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதையும், உள்ளே இருந்த நகைகள் காணாமல் போயிருப்பதையும் கண்டு ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கடையை சுற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் சான்றுகள் சேகரித்தனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் தற்போது போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் யார், எத்தனை பேர், எந்த வாகனத்தில் வந்தனர் என்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அருகிலுள்ள பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த சம்பவம் சிங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாளில் கடை மூடப்பட்டிருந்ததை பயன்படுத்தி திட்டமிட்டு இந்த கொள்ளை நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
தப்பியோடிய கொள்ளையர்களை விரைவில் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN