Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்கால், 16 பிப்ரவரி (ஹி.ச)
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அனுமதி சீட்டு பெற்று கடலுக்குச் மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
காரைநகர் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 25 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். அவர்களது 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b