Enter your Email Address to subscribe to our newsletters

கார்டும், 16 பிப்ரவரி (ஹி.ச.)
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே 2023-ல் ஒரு கோரமான உள்நாட்டு யுத்தம் மூண்டது. யாருக்கு அதிகாரம் என்ற உச்சக்கட்ட போட்டியே இந்த போரின் ஆணிவேர்.
ராணுவத்தின் பக்கம் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் தலைமையிலான 'சூடான் ஆயுதப் படைகள்' களத்தில் இறங்கின. அதே போல், துணை ராணுவம் சார்பில் முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப் எனப்படும் மின்னல் வேக அதிரடிப் படை களம் கண்டது.
ஆரம்பத்தில் இருவரும் கைகோர்த்து ஆட்சியைப் பிடித்தாலும், போகப்போக துணை ராணுவத்தை ராணுவத்தோடு இணைக்கும் பேச்சுவார்த்தையில் கசப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக டார்பூர் மாகாணத்தில் இருக்கும் எல்-பாஷர் நகரத்தை கைப்பற்ற ஆர்.எஸ்.எப் படைகள் கடந்த அக்டோபர் மாதம் ஒரு வெறித்தனமான தாக்குதலை தொடுத்தன.
அக்டோபர் 25 முதல் 27 வரை வெறும் மூன்றே நாட்களில், சுமார் 4,400 அப்பாவி பொதுமக்களை ஊருக்குள்ளேயே சுட்டு வீழ்த்தினர். உயிர் பயத்தில் ஓடிய குழந்தைகள் உட்பட 1,600 பேரை எல்லையில் வைத்து எந்திரத் துப்பாக்கியால் துவம்சம் செய்தனர்.
துணை ராணுவப் படையின் இந்த கொடூரத் தாக்குதலில் ஒரே வாரத்தில் 6,000-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.
அதோடு, ஆப்பிரிக்க பழங்குடியினப் பெண்களை குறி வைத்து ஆர்.எஸ்.எப். படையினர் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஐ.நா. பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
குழந்தைகளுக்கான மருத்துவமனையை சிறைக்கூடமாக மாற்றி ஆயிரக்கணக்கானோரை அடைத்து சித்ரவதை செய்ததாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.
இந்த போரில் இதுவரை 1½ லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும், சுமார் 1 கோடி மக்கள் வீடுகளை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM