Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 16 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை அடையாறு பகுதியில் கடந்த மாதம் திடீரென ஆங்காங்கே காகங்கள் மடிந்து விழுந்தன.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாநகராட்சி அதிகாரிகள், இறந்த காகங்களை போபாலில் உள்ள விலங்குகள் நோய் ஆராய்ச்சி தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி பரிசோதித்தனர். அதில் இறந்த காகங்களுக்கு H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று (பறவைக் காய்ச்சல்) ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அண்டை மாவட்டமான சித்தூரில் (ஆந்திர மாநிலம்) உள்ள இரண்டு கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களுக்கு தலா 3 குழுக்கள் வீதம் மொத்தம் 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் பண்ணைகள், சந்தைகள் மற்றும் பறவைகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளான கிறிஸ்டியன்பேட்டை, சைனகுண்டா, பத்திரபள்ளி உள்ளிட்ட இடங்களில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் மூலம் ஆந்திராவிலிருந்து வேலூர் மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.
கோழி, கோழித்தீவனம் மற்றும் முட்டைகள் ஏற்றிவரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுவதுடன், உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது சந்தேகத்திற்கிடமான சரக்குகள் கொண்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் பரவலை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, பொதுமக்கள் இறந்த பறவைகளைத் தொடாமல் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், வேலூரில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் என்பது பெரும்பாலும் காட்டுப் பறவைகள் மற்றும் வளர்ப்பு கோழிகளுக்கு ஏற்படக்கூடிய வைரஸ் தொற்றாகும். இது பிற பறவைகள் மற்றும் சில விலங்கு இனங்களுக்கும் பரவக்கூடியது.
அரிதான சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN