Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் கீழடியில் இதுவரை 10 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கு ஏறத்தாழ 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொன்மைமிகு தமிழ்ச் சமூகத்தினர் பயன்படுத்திய பொருட்கள் அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் அனைத்தும் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சி நடைபெற்ற கீழடி பகுதியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக சுமார் 4.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அங்கு 65 ஆயிரத்து 380 சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தை கடந்த 13-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். தற்போது இந்த நவீன திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் எனப் பல்வேறு தரப்பினரும் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில், திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது.
அதன்படி, பெரியவர்களுக்கு ரூ.20, 5 முதல் 12 வயது வரையிலான சிறுவர், சிறுமியர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டுப் பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர், சிறுமியர்களுக்கு ரூ.25 எனவும், புகைப்படக் கருவிக்கு ரூ.30, மற்றும் ஒளிப்பதிவு செய்ய ரூ.100 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், திறந்தவெளி அருங்காட்சியகத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பார்வையிடலாம்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b