Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 17 பிப்ரவரி (ஹி.ச.)
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இத்திருவிழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மயான கொள்ளை திருவிழா குழுவினர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை ஊர்வலமாக வேலூர் புதிய பேருந்து நிலைய பாலாற்றங்கரைக்கு கொண்டு வந்தனர்.
ஒவ்வொரு பகுதி தேராக பாலாற்றில் இறங்கி சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பின்னர் தேர்கள் அங்கிருந்து தங்கள் நிலையை நோக்கி புறப்பட்டன.
இந்த நிலையில் நேற்றிரவு 11.40 மணியளவில் கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் சூறையிடும் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாற்றில் இருந்து மேம்பால சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென தேர் நிலை சரிந்து கவிழ்ந்தது.
இதில் தேரின் மீது அமர்ந்திருந்த 10-க்கும் மேற்பட்டோர் தேரின் அடியில் சிக்கினர்.
அவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூக்குரல் எழுப்பினர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் உடனடியாக அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிதுநேர போராட்டத்துக்கு பின்னர் தேரின் அடியில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தேர் கவிழ்ந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தேர் கவிழ்ந்த தகவல் அறிந்தவுடன் அம்மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Hindusthan Samachar / vidya.b