Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகின்றார்.
அதில் அவர் பேசியது,
மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றி. எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி கிடைத்திடும் வகையில் அண்மையில் மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையோடு கோடைகால சிறப்புத் தொகையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை செலுத்தும் போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சி அடைந்தது. மகளிர் மனம் குளிர, இல்லத்தரசிகள் இதயம் நெகிழும் வண்ணம் ஒரே நாளில் 6500 கோடி ரூபாய் தொகையை ஏழை மக்களின் கையில் சென்று சேர்த்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். 1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தபோது நாடே திரும்பிப் பார்த்தது.
மகளிர்க்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் விடியல் பயணத்தின் மூலம் சராசரியாக 888 ரூபாய் மாதத்திற்கு பெண்கள் சேமிக்கின்றனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை ஆகும். நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன.திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய இந்த அரசு மானியம் வழங்குகிறது.தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர்.
எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கைப்பாதையில் பயணிக்கும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் தனிக்கவனத்துடன் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வரை இடைநில்லாமல் கல்வி பயில தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே உயர்கல்வியை பொறுத்தவரையில் தேசிய சராசரியில் 47 சதவிகிதமாக உயர்கல்வி உள்ளது.
உயர்கல்வித்துறைக்கு 8505 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.
Hindusthan Samachar / vidya.b