வங்கதேசத்தில் இன்று புதிய பிரதமர் பதவி ஏற்கும் விழா - இந்தியாவின் பிரதிநிதியாக ஓம் பிர்லா பங்கேற்பு
டாக்கா, 17 பிப்ரவரி (ஹி.ச.) வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு, 2024-ல் நடந்த கொந்தளிப்பான மாணவர் கிளர்ச்சி மற்றும் வன்முறையின் விளைவாக முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, முகமது யூனுஸ் அவர்களின் தலைமையில் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்ட
வங்கதேசத்தில்  இன்று புதிய பிரதமர் பதவி ஏற்கும் விழா - இந்தியாவின் பிரதிநிதியாக ஓம் பிர்லா பங்கேற்பு


டாக்கா, 17 பிப்ரவரி (ஹி.ச.)

வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு, 2024-ல் நடந்த கொந்தளிப்பான மாணவர் கிளர்ச்சி மற்றும் வன்முறையின் விளைவாக முடிவுக்கு வந்தது.

இதன் தொடர்ச்சியாக, முகமது யூனுஸ் அவர்களின் தலைமையில் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது. புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது.

இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி பிரம்மாண்ட வெற்றியை தனதாக்கியது. மொத்தமுள்ள 297 இடங்களில் அந்த கட்சி 207 இடங்களை கைப்பற்றி அசத்தியது.

வலதுசாரி கொள்கையுடைய ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை தனதாக்கியது. இந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் புதல்வருமான தாரிக் ரகுமான் (வயது 60) புதிய பிரதமராக பொறுப்பேற்க்கவுள்ளார்.

அவரின் பதவியேற்பு விழா இன்று (செவ்வாய்கிழமை) மாலை 4 மணியளவில் தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ளது.

வங்கதேச நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், தாரிக் ரகுமானுக்கு வங்கதேச ஜனாதிபதி முகமது சகாபுதீன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், புதிய அமைச்சரவைக்கும் அவர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய நாட்டின் சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்க உள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM