Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் தேசியக் குழு உறுப்பினருமான அண்ணாமலை, தயாநிதி மாறனின் வீடியோவை பகிர்ந்து அவரின் பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி மக்களும் திமுகவை புறக்கணிப்பார்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒன்றிய அரசிடம் இருந்து கோவைக்கு அண்ணாமலை பெற்றுத் தந்த திட்டங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாஜக அண்ணாமலை வெளியிட்ட பதிவில், திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசுகிறார் திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோயம்புத்தூர் மக்கள், பண்பானவர்கள். மரியாதை மிக்கவர்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் தங்கள் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகின்றனர். திமுகவினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை.
கோபாலபுரக் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கே இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பினால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும்.
தனது திமிர்த்தனமான பேச்சுக்கு, தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுகவினரின் இந்த ஆணவத்தால்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதி மக்களும், திமுகவைப் புறக்கணித்து வருகிறார்கள். வரும் தேர்தலில், தமிழகம் முழுவதுமே திமுகவுக்கு அதே நிலைதான் ஏற்படும் என்று அண்ணாமலை விமர்சித்து இருந்தார்.
அதற்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் தருகையில், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள் நகைச்சுவையாகப் பேசிய காணொளியை, வெட்டி ஒட்டிப் போட்டு அரசியல் செய்யும் அட்டக்கத்தி, பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து, ஒன்றிய அரசிடம் கோவைக்கு பெற்றுத் தந்த திட்டங்கள் என்ன?
கோவை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தர எடுத்த முயற்சிகள் என்ன? கோவை மாவட்ட தொழில் முனைவோர்களை வதைக்கும் ஜி.எஸ்.டி பிரச்சனையில் பங்களிப்பு என்ன?
இறக்குமதி வரிகளால் பாதிக்கப்பட்ட கரூர், திருப்பூர் மற்றும் கோவை ஏற்றுமதியாளர்களுக்கு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், வெறும் வாயில் வடை சுடுவதையும் வெற்று காற்றில் சாட்டை சுழற்றியதையும் கோவை மக்கள் தெரிந்து கொண்டதால் தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தார்கள்.
என்று பாஜக மற்றும் அண்ணாமலையை செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN